கலைஞரும் புரட்சித் தலைவரும் பாராட்டிய பாரதிராஜாவின் படம் 

“அலைகள் ஓய்வதில்லை" திரைப்படம் பாரதிராஜா என்னும் படைப்பாளியை  திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்ற படம். அந்தப் படத்தின் கதைக்கருவை விட அந்தப் படத்தின் இறுதிக் கட்டக் காட்சியை பாரதிராஜா கையாண்டிருந்தவிதம்தான் கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜிஆர்,  உட்பட பல அறிஞர் பெருமக்கள் அந்தப் படத்தைப் பாராட்டக் காரணமாக அமைந்தது 

அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு “அலைகள் ஓய்வதில்லை” படம்  தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அமைந்திருந்த திரை அரங்கில் திரையிட்டுக் காண் பிக்கப்பட்டது.படத்தைப் பார்த்துவிட்டு அரைமணி நேரத்துக்கு மேலாக பாரதி ராஜாவைப் பாராட்டிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகளையும் தொழில் நுணுக்கக் கலைஞர்      களையும் பாராட்டுவதற்காக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைவாணர் அரங்கத்திலே ஒரு விழாவினை எடுத்து அந்தப்  படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் தனது ராசிக்கரங் களால் வெள்ளிக் கேடயங்கள் வழங்கினார்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டப் பட்ட ஒரே திரைப்படம் பாரதிராஜாவின் “அலைகள் ஓய்வதில்லை”  மட்டுமே .

இப்படி மிகச் சிறந்த பாராட்டுக்களை அவருக்குப் பெற்றுத்தந்த அந்த படத்தை உருவாக்கும்போது பாரதிராஜா சந்தித்த விமர்சனங்கள் ஏராளம்.  

அதற்குக் காரணம் என்ன?

"16 வயதினிலே,கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள்,புதிய வார்ப்புகள்,

நிறம் மாறாத பூக்கள்" என தொடர்ந்து ஐந்து வெள்ளிவிழாப் படங்களைத் தந்தவர் பாரதிராஜா.அவருக்கு முன்னாலே தொடர்ந்து அத்தனை வெற்றிப் படங்களை எவரும் கொடுத்தது இல்லை. 

அந்த தொடர் வெற்றிகளுக்குப் பிறகு பாரதிராஜாவுடன் அவரது முதல் படத்தி லிருந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளரான நிவாசின் இயக்கத்திலே "கல்லுக்குள் ஈரம்"  படத்தில்  ஒரு இயக்குனரின் பாத்திரத்திலே நடித்தார் அவர். ஒரு காலகட் டத்தில் தெலுங்குப் பட உலகில் கொடி கட்டிப்பறந்த விஜயசாந்தியும், தமிழிலும் தெலுங்கிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்த அருணாவும் அந்த "கல்லுக் குள் ஈரம்" படத்தின் மூலம் அறிமுகமானவர்கள்தான்.அந்தப் படம் வெற்றிப் படமாக அமையவில்லை.  

அப்படத்தைத் தொடர்ந்து தனது சொந்தப் பட நிறுவனமான மனோஜ்  கிரியே ஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய”நிழல்கள்"படத்திலேதான் மணிவண்ணனை கதை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. “கல்லுக்குள் ஈரம்” படத்துக்குப் பிறகு பாரதிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் நிவாஸ் பணியாற்றவில்லை. எனது கண்கள் என்று பாரதிராஜா போற்றிக் கொண்டாடிய ஒளிப்பதிவுக் கலைஞரான பி.கண்ணன் அந்தப் படத் திலேதான் பாரதிராஜாவோடு முதன் முதலாக இணைந்தார். 

"16  வயதினிலே" படம் முதல்  பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய கதா சிரியர் பாக்கியராஜ்  "புதிய வார்ப்புகள்" படம் முடிந்தவுடன் "சுவர் இல்லாத சித்திரங்கள்" படத்தை இயக்கி நடித்துக்  கொண்டிருந்ததால் அவரும் "நிழல்கள்" படத்தில் பணியாற்றவில்லை. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிவாஸ்,பாக்கியராஜ் ஆகிய இருவருடைய பங்க ளிப்பும் இல்லாமல் வெளிவந்த  "நிழல்கள்" படம் பாராட்டுக்களைப் பெற்ற அளவிற்கு வசூலைப்  பெறவில்லை 

பாரதிராஜாவின் தொடர் வெற்றிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் பாரதிராஜாவின் வெற்றிகளுக்குக் காரணமே நிவாசும், பாக்கியராஜூம்தான் என்றும் அவர்கள் இல்லாததால்தான் "நிழல்கள்" படத்தை பாரதிராஜாவால் வெற்றிப்படமாக தரமுடியவில்லை என்றும் ஒரு விஷமத்தனமான பிரச்சாரத் தைத் தொடங்கினார்கள். 

அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்கின்ற விதமாக தனது அடுத்த படத்தைத் தரவேண்டிய கட்டாயத்திலிருந்தபோது பாரதிராஜா இயக்கிய படம் தான் "அலைகள் ஓய்வதில்லை."

பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான நாளிருந்தே தங்களுக்காக ஒரு படத்தை இயக்கித் தரும்படி இளையராஜாவின் மூத்த சகோதரரான பாஸ்கர் கேட்டுக் கொண்டே இருந்ததால் "அலைகள் ஓய்வதில்லை" படத்தை பாஸ்கரின்  பாவலர் பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்க முடிவு செய்தார் பாரதிராஜா .

மணிவண்ணன் கதைவசனம் எழுதிய அந்தப் படத்தின் கதை ஒரு இஸ்லாமியப் பெண்ணை பிராமண இளைஞன் ஒருவன் காதலிப்பதால்  ஏற்படும் பிரச்னை களை மையப்படுத்தித்தான் முதலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அந்தப் படத்திலே இடம் பெற்ற “ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே” என்று தொடங்கும் பாடலின் பல்லவியில்   கூட

“இங்கிரண்டு ஜாதி மல்லிகை

தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை

கோவிலில் காதல் தொழுகை” என்று எழுதியிருந்தார் அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து 

பின்னர் இஸ்லாமிய சமூகத்திலிருந்து எதிர்ப்புகள் எழுமோ என்ற சந்தேகத்தில் தான் அந்தப் படத்தின் நாயகி பாத்திரம் மேரி என்ற கிருஸ்துவப் பெண்ணின் பாத்திரமாக மாற்றி அமைக்கப்பட்டது 

தனது இரண்டாவது படமான "கிழக்கே போகும் ரயில்"படத்தில் எல்லா பாத்தி  ரங்களுக்கும் புதுமுகங்களை அறிமுகம் செய்ததைப்  போல "அலைகள் ஓய்வ தில்லை" படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தார்  பாரதிராஜா.

அதற்கான புதுமுகத் தேர்வில் அவர் இருந்த போது அவரைப் பார்க்க தன்னுடைய தாயாரான சரசம்மாவோடு வந்தார் அம்பிகா.அப்போது  அம்பிகா நடித்து சில படங்கள் வெளியாகி இருந்ததால் அந்தப் படத்தில் அவரைப் பயன் படுத்த முடி யாத நிலையில் 'உனக்கு வேறு யாராவது சகோதரிகள் இருக்கிறார்களா?" என்று பாரதிராஜா அவரைப் பார்த்து கேட்க  தனது கைப்பையிலிருந்து  அம்பிகா, அவ ரது தங்கைகள் மல்லிகா,சந்திரிகா ஆகிய மூவரும் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து நீட்டினார் அம்பிகாவின் தயாரான சரசம்மா. 

அதில் இருந்த சந்திரிகாவின் புகைப்படத்தை ஊடுருவிப் பார்த்த பாரதிராஜாவின் காமிரா கண்களுக்கு   கதாநாயகி ஆவதற்கு அவர் சரியானவர் என்று அப்போதே தோன்றியிருக்க வேண்டும்.

அடுத்து  “இந்தப் பெண் இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறாள்?” என்று அம்பிகாவின் தாயாரிடம் பாரதிராஜா கேட்க பத்தாவது படித்துக் கொண்டிருப்ப தாக அம்பிகாவின் அம்மா  பதில் சொன்னார். 


அப்போது திருவனந்தபுரத்திலிருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்த கல்லரா என்ற கிராமத்தில் தங்கி படித்துக் கொண்டிருந்தார் சந்திரிகா.  அடுத்த வாரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் திருவனந்தபுரம் வர இருப்ப தாகவும் அப்போது கல்லராவிற்கு வந்து சந்திரிகாவை நேரில் பார்த்து விட்டு முடிவு செய்யலாம் என்றும் கூறினார்  பாரதிராஜா. 

அவர் கல்லரா செல்வதற்கு முன்னாலேயே தனது மகள் சந்திரிகாவிடம் ஒரு பெரிய டைரக்டர் அவரைப் பார்க்க கல்லரா வரப் போகிறார் என்ற செய்தியை சொல்லியிருந்தார் சரசம்மா. ஆனால் அப்போது சந்திரிகாவிற்கு நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை என்பதால் அவர் அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.


சொன்னபடி ஒரு வாரம் சென்றவுடன் தனது ஒளிப்பதிவாளரான பி.கண்ணனுடன் கல்லராவுக்கு பாரதிராஜா சென்றபோது மாலை ஆறு மணிக்கு மேலாகி விட்டது. அந்த  நேரத்தில்  அங்கே மின்சாரம் இல்லாததால்   மெழுகு வர்த்தியின் விளக்கு வெளிச்சத்தில்தான் பாரதிராஜாவால் சந்திரிகாவைப் பார்க்க முடிந்தது.

அப்போது அவரது நடை, முகபாவம் இவற்றை எல்லாம் சரியாகப் பார்க்க முடி யாமல் போனதாலோ  என்னவோ தனக்கு அந்த வீட்டை சுற்றி காண்பிக்கும்படி சந்திரிகாவிடம் சொன்னார் பாரதிராஜா. பேய்ப்படங்களில்  நடப்பது போல ஒரு மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு சந்திரிகா முன்னால் நடக்க அவ ரது முக பாவத்தை கூர்ந்து  கவனித்தபடி அவருக்கு பின்னாலே சென்று கொண்டி ருந்த பாரதிராஜா அந்த வீட்டைவிட்டு கிளம்பும்போதே சந்திரிகாதான் தன்னு டைய அடுத்த நாயகி என்பதை  முடிவு செய்துவிட்டார்.“அடுத்த வாரம் சென்னை க்கு  கூட்டி வாருங்கள்.மேக்கப் போட்டு கொஞ்சம் ஸ்டில்கள் எடுத்துப் பார்ப் போம்”என்று சந்திரிகாவின் தாயாரான  சரசம்மாவிடம்  சொல்லிவிட்டு கிளம்பி னார் அவர். 

அப்போது அம்பிகா சென்னையில் ரஞ்சித் ஓட்டலில்தான் தங்கியிருந்தார்.அந்த ஹோட்டலிலேயே சந்திரிகாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு இளையராஜாவை சந்திக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு பாரதிராஜாவுடன்  போனார் சந்திரிகா. 

“இவர்தான் 'அலைகள் ஓய்வதில்லை'படத்தில்  அறிமுகமாகப் போகும் கதா நாயகி "என்று இளையராஜாவிடம் பாரதிராஜா சந்திரிகாவை அறிமுகப்படுத்தி யதும்“ஓ இவர்தான் அந்த கப்பக் கிழங்கா”என்றார் இளையராஜா.அவர் ஏன் அப்படி தன்னை அழைக்கிறார் என்று புரியாமல் முழித்தார் சந்திரிகா. 

இளையராஜா அப்படி அழைத்ததற்குக் காரணம் “அலைகள் ஓய்வதில்லை” படத் திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு பாட்டு.அந்தப் படத்தின் நாயகன் நாய கியை கேலி செய்யும் விதமாக  "வாடி என் கப்பக்கிழங்கே "என்று தொடங்கும் பாடல் ஒன்று அந்தப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததால்தான் அவரை அப்படி அழைத்தார் இளையராஜா

“கிழக்கே போகும் ரயில்” படத்தில் அறிமுகமான ராதிகாவின் பெயர் “ஆர்” என்ற எழுத்தில் தொடங்கும் பெயராக அமைந்ததால்தான் பாரதிராஜாவின்“புதிய வார்ப் புகள்” பட நாயகி ரதியாகவும் நிழல்கள் பட நாயகி ரோகிணியாகவும் பெயர் மாற் றம் பெற்றனர்.அந்த “ஆர்” வரிசையில் ராதா என்று பெயர் சூட்டப்பட்டு “அலை கள் ஓய்வதில்லை” படத்திலே அறிமுகமான ராதா முதல் படத்திலேயே தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னியானார். 

அந்தப் படத்தில்தான்   அவருக்கு ஜோடியாக கார்த்திக் அறிமுகமானார்  என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால் அந்தப் பாத்திரத்திற்கு முதலில் தேர்வானவர் கார்த்திக்  இல்லை. 

 


Comments

  1. My favorite fair Karthik Radha 1st introduction god s great

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிவாஜின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்