ஜெமினிகணேசன் - சாவித்திரி ஜோடியீன் மோதலும் காதலும்

டி. ஆர்.ராஜகுமாரி தொடங்கி நயன்தாரா வரையிலே  எண்ணற்ற நடிகைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது கனவுக்கன்னிகளாகப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் தங்களின்  சொந்த சகோதரியாக ஒரு நடிகையைப் பார்த்தார்கள் என்றால்  அந்த பெருமைக்குரியவர்  இன்றுவரை சாவித்திரி மட்டுமே.


எண்ணற்ற தெலுங்கு நாடகங்களில் நடித்த சாவித்திரியை சினிமாவில் நடிப்பதற்காக அவரது பெரியப்பாவான சவுத்ரி சென்னைக்கு  1948 ஆம் ஆண்டில் அழைத்து வந்தபோது சாவித்திரிக்கு வயது பன்னிரண்டு.

சென்னையில் பல தயாரிப்பாளர்களது கதவுகளைத் தட்டிய அவர்கள் ஜெமினி ஸ்டுடியோவையும் விட்டு வைக்கவில்லை.

அப்போது ஜெமினி ஸ்டுடியோவில் நட்சத்திரங்களைத் தேர்வு செய்கின்ற பொறுப்பிலிருந்தவர் ஜெமினி கணேசன்.

ஜெமினி ஸ்டுடியோவில் எல்லாமுமாக இருந்த கொத்தமங்கலம்  சுப்பு சாவித்திரியை நடித்துக் காட்டச் சொன்னார். தனக்குத் தெரிந்த ஒரு தெலுங்குப் பாடலைப் பாடியபடி நடனமாடிக் காட்டினார் சாவித்திரி.

அவரது திறமையைப் பாராட்டிய கொத்தமங்கலம் சுப்பு அப்போது சாவித்திரி ரொம்பவும்  சின்னப்பெண்ணாக  இருந்ததால் "அடுத்த படத்தில் பார்க்கலாம்" என்று கூறி விட்டார்.

"ரொம்பவும் சூட்டிகையான பெண்.வருங்காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வருவதற்கான அறிகுறிகள்  பிரகாசமாக இருக்கின்றன" என்று ஒரு குறிப்பை எழுதி சாவித்திரி கொடுத்த புகைப்படத்துடன்  ஜெமினி  ஸ்டூடியோவின் ஆல்பத்தில் ஒட்டி வைத்த ஜெமினி கணேசனுக்கு  ஐந்து வருடங்கள் கழித்து தன்  மனதில் அந்தப் பெண் ஒட்டிக்கொள்ளப் போகிறார் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  

அந்த சம்பவத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் சாவித்திரியை சந்தித்தது "மனம் போல மாங்கல்யம்"



படத்தின் படப்பிடிப்பில்தான். அதுவரை சிறு  சிறு பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு கிடைத்த முதல் பெரிய வாய்ப்பு அந்தப்படம்.



ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக அந்தப்படத்தில் நடித்த சாவித்திரி அப்போது மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்தார்."தேவதாஸ்" படத்தில் அவர் ஏற்றிருந்த பார்வதி பாத்திரம்  ஆந்திராவில் மட்டுமின்றி தமிழகத்திலும் பட்டி தொட்டிவரை அவரைக் கொண்டுபோய் சேர்த்திருந்தது.

அற்புதமான நடிப்பாற்றல் கொண்ட நடிகையாக விளங்கிய போதிலும் அந்த புகழ் வெளிச்சத்தால்  கொஞ்சமும் பாதிக்கபடாத நடிகையாக சாவித்திரி இருந்தார். அதனால் தானோ என்னவோ சாவித்திரியை "மனம் போல மாங்கல்யம்" படத்தின் படப்பிடிப்பில் முதல் நாள் பார்த்தபோதே  ராதாமோகனின் "மொழி" திரைப்படத்தில் வருவதுபோல ஜெமினி கணேசனின் உள்  மனதுக்குள் விளக்குகள் எரிந்தன.  மணி ஓசையும்  கேட்க ஆரம்பித்தது.

சாவித்திரியைப் பொறுத்தவரை அவர்  அதுவரை பார்த்த கதானாயகர்களிலிருந்து  ஜெமினிகணேசன் வித்தியாசமானவராக தெரிந்தார்.படித்தவராக இருந்ததால் பண்போடு பழகினார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக சாவித்திரி ஜெமினியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பிய போதெல்லாம் காதல் கொண்ட அவரது பார்வை தன்  மீது தொடர்ந்து பதிந்து கொண்டிருப்பதை சாவித்திரி  உணர்ந்தார். இவை எல்லாமாகச் சேர்ந்து அந்த பதினேழு  வயதுப்பெண்ணின் மனதை கட்டுப்பாடு இழக்கச் செய்தது.

அந்தக் காதல் அனுபவத்தைப் பற்றி பின்னர் குறிப்பிடும்போது "முதலில் அவரது எக்ஸ்ரே பார்வை என்னை ஊடுருவியது.நாட்கள் செல்லச் செல்ல என்னை அறியாமல் நானும் என் மனதை அவரிடம் பறி  கொடுத்தேன்" என்று தனது காதல் அனுபவத்தைப் பற்றி பதிவு செய்திருக்கிறார் சாவித்திரி.

அம்பிகாபதி -அமராவதி போல தெய்வீகக் காதலில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் ஈடுபட்டிருந்த போதிலும் தங்களது காதலை வெளிப்படையாக அறிவிக்க முடியாத இக்கட்டில் அவர்கள் இருந்தனர்.

அதற்கு முக்கியமான காரணம் சாவித்திரியின் பெரியப்பாவான சவுத்ரி.  சாவித்திரியை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

அப்படி ஒரு சூழ்நிலையில்  ஒருவரையொருவர் மிகத் தீவிரமாக நேசித்த ஜெமினியும் சாவித்திரியும் "அலைபாயுதே" பாணியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.   

1953 ஆம் ஆண்டிலேயே அவர்கள் இருவருக்கும திருமணம் நடந்துவிட்டதாக பல பத்திரிகைக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனாலும் அவர்கள் திருமணத்தை வெளியே அறிவித்தது 1955ஆம் ஆண்டு லக்ஸ் சோப் விளம்பரத்தில் சாவித்திரி கணேஷ் என்று சாவித்திரி போட்டிருந்த கையெழுத்துதான்.

அந்தத் தம்பதிகளுக்கு திரையுலகம் வழங்கிய தீபாவளிப் பரிசாக "மனம்போல மாங்கல்யம்" படத்தின் வெற்றி அமைந்தது.

தலை தீபாவளி கொண்டாட்டத்தின்போது  தனது காதல் மனைவிக்கு வெண்பட்டு சேலை ஒன்றை வாங்கி பரிசளித்தார் ஜெமினிகணேசன்.அந்தச்  சேலையை தீபாவளியன்று காலையில் சாவித்திரி கட்டிக் கொண்டபோது "தீபாவளியன்று  கட்டிக்கொள்ள இந்த வெள்ளைக் கலர் சேலைதான் கிடைத்ததா?" என்று கடிந்து கொண்டார் சவுத்தரி. அந்த தீபாவளி தினத்தில் தனது காதல் மனைவியைப் பார்க்க ஜெமினிகணேசன் எவ்வளவோ முயற்சி செய்தார்.  ஆனால் சவுத்ரி அவரை  அனுமதிக்கவில்லை.

அவர்கள் இருவரும் தீவிரமாகக் காதலிக்கும் விஷயம் தெரிந்ததும்  ஜெமினியின் அதிகாரபூர்வமான மனைவி பாப்ஜியை விட  அதிகமாக அவர்கள் காதலுக்கு  எதிர்ப்பு தெரிவித்தவர் தாலி கட்டாமலே ஜெமினியுடன் வாழ்ந்து அந்த வாழ்க்கையின் பலனாக ரேகா, ராதா என்று  இரண்டு பெண்களைப் பெற்ற புஷ்பவல்லிதான். 

1956 ஆம் ஆண்டில் அபிராமபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஜெமினி கணேசனும் சாவித்திரியும் தனிக்குடித்தனத்தைத் தொடங்கினர்

"வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்தில் ஊமைத்துரை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த எஸ். எஸ். ராஜேந்திரன் அந்தப் படத்திலிருந்து திடீரென்று விலகியவுடன் அந்தப் பாத்திரத்தில் நடித்து உதவும்படி  சிவாஜி  கணேசன்  ஜெமினிகணேசனைக் கேட்டபோது அந்த வாய்ப்பை ஏற்க  ஜெமினி முதலில் மறுத்ததற்கு முக்கியமான  காரணம் அப்போது சாவித்திரி கர்ப்பமாக இருந்ததுதான்.   

"சாவித்திரிக்கு ஒன்றும் ஆகாது" என்று ஜெமினிக்கு ஆறுதல் கூறிய சிவாஜி பிரசவத்தின் போது தான் கூடவே இருப்பதாக சாவித்திரியிடம் சொல்லி அவரது அனுமதியைப் பெற்ற பிறகே அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ஜெமினி.  .அவர்களது திருமண உறவு எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தது என்பதற்கு அந்த நிகழ்ச்சி ஓரு உதாரணம்.

"இவ கூட நடிக்கும்போது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்ப்பா. கொஞ்சம் அசந்தாலும் நம்பளை காலி பண்ணிவிடுவா இது சத்தியம்"என்று நடிகர் திலகம் சிவாஜியால் பாராட்டப்பட்ட ஒரே நடிகை சாவித்திரிதான்..



சிவாஜி சொன்னது பொய்யல்ல,நூற்றுக்கு நூறு உண்மை என்பதை "பாசமலர்" படத்தில் சிவாஜியோடு நடித்திருந்த பல காட்சிகளில் நிரூபித்திருந்தார் சாவித்திரி.  "நடிகையர் திலகம்" என்று திரை ரசிகர்கள் சாவித்திரியைக் கொண்டாட ஆரம்பித்தது "பாசமலர்" படத்திற்குப் பிறகுதான்.



சாவித்திரியின் நூறாவது படமாக "கொஞ்சும் சலங்கை" திரைபப்படம் அமைந்தது. 1950 ஆம் ஆண்டில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சாவித்திரி 1962ஆம் ஆண்டில் நூறு படங்களில் நடித்து முடித்திருந்தார். அது இன்றுள்ள நடிகைகள் நினைத்து பார்க்க முடியாத சாதனை மட்டுமல்லஇனி எவராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனையும் கூட.

"கொஞ்சும் சலங்கை" படத்திலே கதாநாயகனாக நடித்த ஜெமினிகணேசன் அந்த படத்தின் இறுதியில் குமாரி கமலாவை மணம்  புரிந்து கொள்வார். கதைப்படி அதுதான் சரியான முடிவென்றாலும் ஜெமினி சாவித்திரி ஜோடியை உயிருக்குயிராக நேசித்த ரசிகர்களால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  "கொஞ்சும் சலங்கை" படம் -அது அடைந்திருக வேண்டிய  வெற்றியை  பெற முடியாமல் போனதற்கு அது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

தமிழில் பெற்ற புகழுக்கு சற்றும் குறையாமல் தெலுங்கு பட உலகிலும் புகழ் பெற்று விளங்கினார் சாவித்திரி..நாகேஸ்வரராவோடு அதிகமான படங்களில் ஜோடியாக நடித்த நடிகை அவர் மட்டுமே. அவரோடு மொத்தம் நாற்பத்தி மூன்று படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் சாவித்திரி.



சாவித்திரியின் நடிப்புத் திறனைப்பற்றி மிகவும் உயர்ந்த அபிப்ராயம் கொண்டிருந்த நாயகர்களில் நாகேஸ்வரராவும் ஒருவர்.

"சாவித்திரி மாதிரி ஒரு நடிகையைப் பார்க்கவே முடியாது. தெலுங்குப் படம் ஒன்றிலே அவர் ஏற்று நடித்த பாத்திரத்தை இந்தியில் மீனாகுமாரியும்,வங்காள மொழியில் சுசித்ரா சென்னும் நடித்தார்கள் ஆனால் அவர்கள் இருவராலும் நடிப்பிலே  சாவித்திரியின் பக்கத்தில் கூட வர முடியவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார் நாகேஸ்வரராவ்

தமிழிலே "நடிகையர் திலகம்" என்று போற்றப்பட்ட சாவித்திரிக்கு "மகா நடி" என்று பட்டம் சூட்டி அழகு பார்த்தது தெலுங்குப் பட உலகம்.

ஜெமினி கணேசனுக்கு மூன்று மனைவிகள் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளுமே பெண் குழந்தைகள். தனக்கு ஆண் வாரிசே இல்லையே என்று ஜெமினி கணேசன் ஏங்கிய போது மீண்டும் கர்ப்பமானார் சாவித்திரி

அந்தக் குழந்தையாவது ஆண் வாரிசாக இருக்குமா என்று தெரிந்து கொள்வதற்காக தனது நெருங்கிய நண்பரும்,ஜோதிட வல்லுனருமான  வித்வான் வே. லட்சுமணனைச்  சந்தித்தார் ஜெமினிகணேசன்.

"அடுத்தது நிச்சயம் ஆண் குழந்தைதான்" என்று அவர் சொன்னது அப்படியே பலித்தது.

திரையுலகில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த சாவித்திரிக்கு 1965 ஆம் ஆண்டில் பட வாய்ப்புகள் குறைந்தன

ஆனால் அவரது காதல் கணவரான ஜெமினி கணேசனோ வைஜயந்தி மாலா, காஞ்சனா,கே. ஆர். விஜயா என்று பல நடிகைகளுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தார். அவர் "காதல்மன்னன்" என்பது உலகத்துக்கே தெரிந்திருந்தபோது சாவித்திரிக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா என்ன?அந்த மன உளைச்சலில் மதுப்பழக்கத்துக்கு ஆளான அவர் ஒரு கால கட்டத்தில் நிதானத்தை இழக்கத் தொடங்கினார் .

"கப்பலோட்டிய தமிழன்" படத்திலே நடிக்கும் போது அவருடன் நடித்த ஜெமினிகணேசன் அவரது நடிப்பில் ஒரு சிறு திருத்தத்தை சொன்னபோது "எனக்கே நடிப்பு சொல்லித் தர்றீங்களா" என்று ஜெமினி கணேசன்  மீது சீறிப் பாய்ந்ததுடன் தனது கையில் இருந்த கரண்டியையும் அவர் மீது வீசினார் சாவித்திரி.  அவர்களுக்கு இடையே மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டிருப்பதை வெளி உலகத்துக்கு அறிவித்த முதல் சம்பவமாக அது அமைந்தது.

பட வாய்ப்புகள் அதிகமாக  இல்லாததால்  படங்களைத் தயாரிக்கவும் இயக்கவும் முடிவெடுத்தார் சாவித்திரி. அவரது நிதி நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்த ஜெமினிக்கு அதில் கொஞ்சமும் உடன் பாடில்லை.அவரை எதிர்த்துக் கொண்டு  படத்தைத் தயாரித்த சாவித்திரி மிகப்பெரிய கடன் சுமையில் மூழ்கினார்

ஏற்கனவே குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பத்தோடு கடன்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதால் காலை, மாலை என்ற வித்தியாசம் இல்லாமல் மதுவிலே வீழ்ந்து கிடந்தார் அவர்.

நல்ல நேரம் வரும்போது நல்ல நண்பர்கள் சேருவது போல கெட்ட நேரம் வரும்போது கெட்ட நண்பர்களாக வந்து சேருவார்கள். அதுதான் சாவித்திரிக்கும் நேர்ந்தது.

ஒரு நாள் தான் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் தனது ஆருயிர் கணவனான ஜெமினி கணேசனை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கோபத்துடன் கூறினார் அவர்

அன்று அந்த வீட்டை விட்டு வெளியேறிய ஜெமினி கணேசன் அதற்குப்பிறகு அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கவேயில்லை.

ஒரு அழகான காதல் கதைக்கு சாவித்திரி வைத்த  முற்றுப்புள்ளியாக  அந்த சம்பவம் அமைந்தது.



Comments

Popular posts from this blog

சிவாஜின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்