தங்கப் பதக்கத்தை வென்ற முதல் தமிழ்ப் படமான "சம்சாரம் அது  மின்சாரம்"  உருவான கதை  

சிறந்த பொழுது போக்குப் படத்திற்கான பிரிவில் தேசிய அளவில் தங்கப் பதக்கத்தைப்  பெற்ற முதல் தமிழ்ப் படம்  விசுவின் இயக்கத்திலே உருவான "சம்சாரம் அது மின்சாரம்".

ஏ.வி.எம் நிறுவனத்திற்கு புகழையும், பணத்தையும் ஒரு சேர சம்பாதித்துக் கொடுத்த அந்தப் படத்தை ஏ.வி. எம் நிறுவனம் தயாரித்தது ஒரு சுவையான சம்பவம்.

ரஜினிகாந்த கதாநாயகனாக நடிக்க ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த படம் "நல்லவனுக்கு நல்லவன்".


அந்த படத்தின் கதை அமைப்பில் உதவியதற்காக கதாசிரியரான விசுவுக்கு தான் பேசிய ஊதியத்தை விட இரு மடங்கு ஊதியத்தைக் கொடுத்தார் எம்.சரவணன்.

எனக்கு நீங்க பணம் கொடுக்கறதை விட ஒரு படத்தை இயக்க வாய்ப்பு  கொடுத்தால் நன்றாக  இருக்கும் என்று விசு அப்போது சரவணனிடம் சொன்னார்.

அப்போது விசு ஒரே நேரத்தில் நான்கு படங்களை இயக்கிக் கொண்டு திரையுலகில் பிசியாக இருந்தார் என்றாலும் ஏ.வி. எம் பேனரில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது அவரது  ஆசையாக இருந்தது.

அவரது கோரிக்கையை  ஏற்றுக் கொண்ட சரவணன்  கூடவே அதற்கு ஒரு நிபந்தனையை  விதித்தார். "இப்போது நீங்கள் நான்கு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஏ.வி. எம்.மில் படம்  பண்ணும் போது உங்களுக்கு வேறு எந்த கமிட்மெண்டும் இருக்கக் கூடாது என்றும்  உங்களது முழு கவனமும் அந்த படத்திலேயே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகவே நீங்கள் இயக்கிக்கொண்டு இருக்கின்ற படங்களை  முடித்து விட்டு வாருங்கள். நிச்சயமாக நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்." என்று அவர்  சொல்ல அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்ட விசு இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் சரவணனை  சந்திக்க வந்தார்

                                                              
                                                                       விசு
                                           

"நீங்க சொன்ன மாதிரியே இப்போது  எனக்கு எந்த கமிட்மெண்டும் இல்ல நான் உங்களுக்குப் படம் பண்ணத் தயார்" என்று சொன்ன விசு அடுத்து சரவணனிடம்  ஒரு முக்கியமான கேள்வியைக்  கேட்டார்.

இப்போது எனக்கு சுத்தமா மார்க்கெட் இல்லை. அது  உங்களுக்குப் பாரவாயில்லையா?” என்பதுதான் அந்தக் கேள்வி .

அவருடைய இரண்டு மூன்று படங்கள் தோல்வி அடைந்திருந்தததால் திரையுலக நியதிப்படி மார்க்கெட்டை இழந்திருந்தார் அவர்

மார்க்கெட்டைப் பற்றி எனக்குக் கவலையில்லை. உங்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். அதனால அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல்   கதையை சொல்லுங்கள். நாம் படம் பண்ணலாம் என்றார் சரவணன்

அன்று முதல் கிட்டத்தட்ட தினம் ஒரு கதை என்கிற அளவில் பல கதைகளை விசு சொன்னார். ஆனால் அந்தக் கதைகள் எதுவுமே சரவணனைக் கவரவில்லை.


                                               ஏ.வி.எம் .சரவணன்

ப்போது விசுவிற்கு ஒரு சந்தேகம் வந்தது.

நமக்கு மார்க்கெட் இல்லை என்பதால் சான்ஸ் தர விருப்பமில்லாமல்தான்  நாம்  சொல்லும் கதைகளை எல்லாம் சரவணன் நிராகரிக்கிறாரோ என்பதுதான் அவரது சந்தேகம்.  

அந்த சந்தேகத்தை மனதிலேயே வைத்துகொண்டிருக்காமல் ஒரு நாள் சரவணனிடமே அதைப்பற்றி அவர் கேட்க  அப்படி ஒரு எண்ணம் எனக்கு  இருந்தால் அதை நேரடியாகவே உங்களிடம் சொல்லி விடுவேன். நான் உங்களிடம் "குடும்பம் ஒரு கதம்பம்" போல ஒரு நல்ல குடும்பக் கதையை எதிர்பார்க்கிறேன். அது மாதிரி ஒரு கதையை நீங்கள் இதுவரை சொல்லவில்லை. இப்போது  நீங்கள் சொன்னாலும்  நாளையே   படப்பிடிப்பைத் தொடங்க நான் தயார்"  என்றார் சரவணன்

அவர் ப்படி சொன்னதைத் தொடர்ந்து விசு ஒரு கதையைச் சொல்ல அந்தக் கதையைக் கேட்ட உடனே சரவணனுக்குப் பிடித்து விட்டது

இந்தக் கதை ரொம்பப் பிரமாதமாக இருக்கிறதே,இதை ஏன் நீங்கள் இத்தனை நாள் சொல்வில்லை?” என்று சரவணன்  கேட்ட போது அந்தக் கதையை ஏன் அத்தனை நாள் சொல்லவில்லை என்பதைப் பற்றி சொன்னார் விசு.

நான் சொன்னது என்னுடைய "உறவுக்கு கை கொடுப்போம்" நாடகத்தின் கதை. இந்தக் கதையை நடிகர் ஓய். ஜி மகேந்திரன்  இயக்கத்தில்   கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே படமாக எடுத்துவிட்டார். அந்தப் படம் சரியாக ஓடவில்லை.அதனால்தான் உங்களிடம் சொல்லவில்லை என்றார் விசு

சரவணனோடு சேர்ந்து அந்தக் கதையைக்  கேட்ட சிலர் "ஏற்கனவே தமிழில் எடுத்து ஒடாத ஒரு கதையை எதுக்கு இப்ப  விசு சொன்னார் ?" என்று யோசித்தபடி இருக்க கதை  எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது விசு. அந்தப் படம் ஓடவில்லை என்பது கூட ஒரு வகையில் நல்லதுதான். நாம் இந்த  கதையை மீண்டும் புதிதாக எடுப்போம்என்று சொன்ன சரவணன் அடுத்து கே. எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து அந்தக் கதைக்கான உரிமையை வாங்கினார்

அதற்குப் பிறகு அந்தப் படத்திற்கான கதை விவாதம் நடந்தது

அப்போது மக்களைக் கவருகின்ற மாதிரி  ஜனரஞ்சகமான விஷயம் எதுவும் இந்தக் கதையில் இல்லையே என்ற சந்தேகத்தை சரவணன் எழுப்ப என்ன வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார் விசு.

 "காமெடி வேண்டும்" என்றார் சரவணன்,

நானும் என் தம்பி கிஷ்முவும் பண்ற காமெடி இருக்கே என்று விசு சொல்லியபோது உங்க காமெடி நகர்ப்புறத்துக்கு ஒகே. தாம்பரம் தாண்டி உள்ள மக்களுக்கு வேறு விதமான காமெடி வேண்டும் என்று சரவணன் வெளிப்படையாக சொன்ன பதிலால்  லேசாக எரிச்சல் அடைய ஆரம்பித்தார் விசு

என்னால கவுண்டமணி, செந்தில் காமெடியை  எல்லாம் இந்தப் படத்தில சேர்க்க முடியாது. அது இந்தக் கதைக்கு பொருந்தவும் பொருந்தாது என்றார்

நான் அவங்களைப் போடச் சொல்லலையே. ஒரு வீட்டு வேலைக்காரி பாத்திரத்தை உருவாக்குங்கள். அந்த வேடத்தில் நடிக்க ஆச்சி மனோரமாவைப் போடுங்கள்...  அந்த வேலைக்காரி அந்த வீட்டில் எல்லோரிடமும் நான்கு பழகுகின்றவராகவும் அந்த வீட்டு பிரச்னைகள் எல்லாவற்றிலும் தலையைக் கொடுக்கின்றவராகவும்  இருக்கட்டும்  என்று சரவணன் சொல்லி முடிப்பதற்குள்இல்லை சார் அது மாதிரி கேரக்டர் எல்லாம் சேர்த்தா கதை கேட்டுப் போய் விடும் என்றார் விசு

நான் சொன்னது ஒரு யோசனைதான். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் அதைப் பற்றி எந்த சிந்தனையும் செய்யாமல் நான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கதை கெட்டுப் போய்விடும் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது

நான் சொன்னதைப் பற்றி  யோசியுங்கள். இரண்டு மூன்று நாட்கள் யோசித்த பிறகும்  அந்த வேலைக்காரி பாத்திரம் இந்த கதைக்குப் பொருந்தாது என்று உங்களுக்கு தோன்றினால் என்னிடம் சொல்லுங்கள் அதற்குப் பிறகு வேறென்ன செய்யலாம் என்று நாம் அனைவரும் சேர்ந்து யோசிப்போம் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் சரவணன்.

இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்கள் கழித்து சரவணனை சந்திக்க வந்தார் விசு

நீங்க சொன்ன கேரக்டர் இந்தக் கதைக்குள்ள எப்படி போய் 'செட்' ஆச்சின்னே தெரியலை சார்என்று சரவவனிடம் சொன்ன அவர் அந்த வேலைக்காரியின் பாத்திரத்தை மிக அழகாக அந்தக் கதைக்குள் சேர்த்து தான் எப்படிப்பட்ட ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிருபித்திருந்தார்.

கண்ணம்மா என்று பெயர் சூட்டப்பட்ட அந்தப் பாத்திரத்தை படத்திலிருந்து உருவினால் அந்தக் கதையே காலி ஆகி விடும் போலிருக்கு என்று பின்னர் விசுவே சொல்கின்ற அளவிற்கு  அமைந்த அந்தக் கதாபாத்திரத்தை மனோரமா தனது அபாரமான நடிப்பாற்றலால் மேலும் வலிமையானதாக்கினார்.


                                                                       

                                                                           மனோரமா 

மொத்தம் முப்பத்தி ஐந்து நாட்களில் முப்பத்தி நான்காயிரம் அடி பிலிமில் எடுக்கப்பட்ட அந்தப் படம் வசூலில் மிகப் பெரிய சாதனையைப் படைத்தது மட்டுமின்றி சிறந்த பொழுது போக்குப் படத்திற்கான பிரிவில் தேசிய அளவில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதன் முதலாக சிறந்த  தமிழ்ப்படத்திற்கான தங்கப்பதக்கத்தை வென்று ஏவி. எம். நிறுவனத்துக்கு மட்டுமின்றி தமிழ் நாட்டிற்கே பெருமை தேடித் தந்தது.

ஏவி எம் தயாரிப்பான நல்லவனுக்கு நல்லவன் படத்தின் திரைக்கதை அமைப்பிற்கு  உதவப் போனபோது தங்கப் பதக்கத்தை வெல்லப்போகிற ஒரு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை அந்த சந்தர்ப்பம் பெற்றுத் தரப் போகிறது என்று அப்போது விசு நினைத்துப் பார்த்திருப்பாரா?

திரைப்படங்களை விட அதிகமான  திருப்பங்களைக் கொண்டதாக நமது வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதற்கு அந்தப் பட அனுபவம் ஒரு நல்ல உதாரணம்.

Comments

  1. Really good movie.this movie proves essential of joint family.

    ReplyDelete
  2. Sir my name is Aravindh am practicing ADVOCATE in Chennai.my cell no is 9381056877. I want to talk with u sir.when u r free call me sir

    ReplyDelete
  3. Like this he made sadurangam movie as thirumathi oru vegumathi

    ReplyDelete
  4. KSG FILM IS GOOD BUT OLD FASION VISU

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிவாஜின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்