கே . வி மகாதேவன் மிது எம் எஸ் விசுவநாதன் வைத்திருந்த பக்தி

ஆரம்ப காலத்தில் டி.எஸ். பாலையாவின் நாடகங்களுக்கெல்லாம் மெட்டுப் போடுவது தவிர  நாடகத்தின் போது ஆர்மோனியம் வாசிக்கும் வேலையையும் செய்து வந்த விஸ்வநாதன்  இடைவேளைக்குப் பிறகு அந்த நாடகங்களில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார். அனு மார் வேடம், ராஜா வேடம் என்று பல வேடங்கள் ஏற்று நடித்த அவரை காலிசெய்ய  சனிபகவான்  ஒரு வில்லின் ரூபத்தில் வந்தார். 

ஒரு நாள் இராமாயண நாடகத்தில்  சீதையின் சுயம்வரத்தில் கலந்து கொள்கின்ற  ராஜாவின் வேடத்தில் நடித்த விஸ்வநாதன் அந்தக் காட்சியில் தப்பித் தவறி வில்லை உடைத்துவிட்டால் பிரச்னையாகி விடும் என்பதால் ஒரு முறைக்கு இரு முறை ஒத்திகை எல்லாம் பார்த்துவிட்டு அதற்குப் பிறகுதான் மேடைக்குப் போனார். ஆனால் அன்று விதி செய்த சதியின் காரணமாக அவர் வில்லைத் தொட்டவுடனேயே அது “மளார்” என்று முறிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த நாடக அரங்கத்தில் பெரும் கூச்சல் எழுந்தது 

“வில்லை உடைத்த ராஜாவுக்கு சீதாவை கட்டி வை” என்று  வில்லங்கமான ரசிகர் கள்  சிலர் குரல் கொடுக்கத் தொடங்க விஸ்வநாதனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.மேடையின் பக்க வாட்டில் நின்று கொண்டிருந்த டி.எஸ்.பாலையா வின்  பக்கம் மெல்ல தன்னுடைய பார்வையை அவர்  திருப்பியபோது 


விஸ்வ நாதனை எரித்து விடுவது போல பார்த்தார்  பாலையா. அப்போது ர சிகர்கள் கூச்சல் அதிகமாகவே  திரை கீழே இறக்கப் பட்டது 

திரை கீழே இறங்குவதற்காகவே  காத்திருந்தது போல விஸ்வநாதனை புரட்டி எடுத்த பாலையா அவரை  கீழே தள்ளி மிதி மிதி என்று மிதித்ததில் விஸ்வநாத னின் மூக்கில் ரத்தம் கொட்டத தொடங்கியது. அதுவரை அப்படி ஒரு அடியை விஸ்வநாதன் தன்னுடைய வாழ்நாளில் வாங்கியதேயில்லை.ஆகவே வாழ்க்கை யின் மீதே மிகப் பெரிய சலிப்பு விஸ்வநாதனுக்கு ஏற்பட்டது. அங்கே இருக்கப் பிடிக்காமல் பாலையாவிடம் அடி வாங்கிய மறுநாள் ஆத்தூரிலிருந்து சேலத்திற்கு கிளம்பினார் விஸ்வநாதன். 



அப்போது சேலத்தில் அமைந்திருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் “பர்மா ராணி” என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தது. அந்தப் படத்திற்கு இசை யமைத்துக் கொண்டிருந்த கே வி. மகாதேவனை  சந்தித்து கோரஸ் பாட ஒரு வாய்ப்பு கேட்கலாம் என்ற முடிவில் மாடர்ன் தியேட்டர்சுக்கு போனார் விஸ்வநாதன். 

ஜூபிடரில் பணியாற்றிய பி. எஸ். திவாகர் போன்ற சில முக்கியமான இசைக் கலைஞர்கள் விஸ்வநாதனின் இசை ஆர்வத்தைப் பற்றியும், அவருடைய திறமை பற்றியும் கே வி மகாதேவனுக்கு சொல்லியிருந்ததால்   விஸ்வநாதனின் இசை ஞானத்தைப பற்றி  கேவி.மகாதேவன் பூரணமாக அறிந்திருந்தார்



ஆனாலும் விஸ்வநாதனுக்கு வாய்ப்பு கொடுக்க அவர் தயாராக இல்லை. அப்படி அவர் வாய்ப்பு கொடுக்க மறுத்ததற்கு  முக்கியமான காரணம் விஸ்வநாதனின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறை. 

“இந்த கோரஸ் பாடற வேலை எல்லாம் வேண்டாம் விஸ்வநாதா. இதுக்குள்ளே அடி எடுத்து உனக்கு வைச்சிட்டே என்றால் அப்புறம் கோரஸ் பாடுவதே உனது வாழ்க்கையாகிவிடும். உன் திறமை,உன்னோட இசை ஞானம், உன்னோட இவ்வளவு நாள் உழைப்பு  எல்லாம் வீணாகப் போய்விடும் .

ஒரு நல்ல யோசனை சொல்றேன் கேட்டுக்கோ. உனக்கு நல்லா  தெரிந்த ஜுபிடர் பிக்சர்ஸ் முதலாளிகள் இப்ப   சென்டரல் ஸ்டுடியோவை லீசுக்கு  எடுத்துக் கொண்டு கோயம்பத்தூர்ல செட்டில் ஆகியிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். நீ நேரா அங்கே போய் சேர்ந்து உருப்படற வழியைப்பாரு.நிச்சயமாக அவங்க உன்னை ஏத்துப்பாங்க.அவங்க அப்படி ஏத்துக்கலேன்னா உங்களை விட்டுட்டுப் போனது நான் செஞ்ச பெரிய தப்புன்னு நீ அவங்க காலில் விழுந்து கெஞ்சினா கூட  தப்பில்லே” என்று  சொந்த அண்ணன் தனது தம்பிக்கு அறிவுரை கூறுவது போல் மிகுந்த பாசத்துடன் கூறினார் மகாதேவன் 

ஒரு நல்ல எதிர்காலத்திற்கான வாசலை மகாதேவன் காட்டிய போதிலும்  ஒருவிதமான குழப்பத்துடன் அங்கேயே நின்று கொண்டிருந்தார்  விஸ்வநாதன்   

அடுத்தபடியாக ஒரு புதிய வேட்டி, சட்டைத் துணி ஆகியவற்றுடன் செலவுக்காக ஒரு இரண்டு ரூபாய் பணத்தையும் விஸ்வநாதனிடம் கொடுத்து அவருக்கு ஆசி கூறி வழி அனுப்பிவைத்தார் மகாதேவன் 

கோரஸ் பாட வாய்ப்பு தரவில்லை என்றாலும் கே. வி. மகாதேவன் பேசிய பேச்சுக்கள், அவர் கூறிய ஆறுதல் எல்லாம் விஸ்வநாதனின் மனதிற்குள் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தின. 

அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு ஜுபிடர் பிக்சர்சுக்குத் திரும்பிய எம். எஸ். விஸ்வநாதன்  அதன் பின்னர் எம்.ஜி.ஆர் நடித்த “ஜெனோவா” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ்ப் பட உலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். 

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தால், அந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாக ஆகிவிடும் என்று திரையுலகினர் பலரும் எண்ணுகின்ற அளவிற்கு பல வெற்றிப் படங்களைக் கொடுத்து அவர் கொடி கட்டிப்  பறந்து கொண்டிருந்த  நேரத்தில் அவரைத் தேடி வந்தார் பிரபல தயாரிப்பாளரான சின்னப்ப தேவர் 



எம்.ஜி.ஆரை வைத்து சின்னப்பதேவர் தயாரித்த பல படங்களுக்குகே.வி.மகா தேவன்தான் அப்போது  இசையமைத்துக் கொண்டிருந்தார்.ஆனால் அவர் இசை யமைத்த படங்களை விட எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவாகிய படங்கள் மிக அதிகமான விலைக்கு அப்போதுவிற்றன.

விநியோகஸ்தர்களால் அதிகம் விரும்பப்பட்ட இசையமைப்பாளராக விஸ்வ நாதன் இருந்ததால் சின்னப்பா தேவர் அடுத்து தயாரிக்கவிருந்த “வேட்டைக் காரன்” படத்துக்கு எம். எஸ். விஸ்வநாதனை  இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யும்படி தேவரிடம் கூறினார் எம். ஜி. ஆர்.  



தேவரைப்  பொறுத்தவரையில் எம். ஜி. ஆர் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என்பதால் அடுத்த நாளே மடி  நிறைய பணத்தைக் கட்டிக் கொண்டு விஸ்வநாதன் விட்டுக்கு போனார் தேவர். 

“ஆண்டவனே! என்னுடைய முதல் படமான “தாய்க்குப் பின் தாரத்து”க்கே நீங்கதான் மியூசிக் போட்டிருக்கணும். அப்போ நீங்க மாடர்ன் தியேட்டர்சில பிசியா இருந்ததால மாமா மகாதேவனைப் போட்டேன். இப்போ  எம். ஜி. ஆரை வைச்சி “வேட்டைக்காரன்”னு ஒரு படம் எடுக்கிறேன் எம். ஜி. ஆரிலிருந்து விநியோகஸ்தர்கள் வரைக்கும் எல்லோரும் அந்த படத்துக்கு நீங்கதான் மியுசிக் போடணும்னு சொல்லிட்டாங்க. அதனால நீங்க பெரிய மனசு பண்ணி படத்தை ஒத்துக்கணும்” என்றார் தேவர் 

எம்.ஜி.ஆரே சொல்லி அனுப்பி இருந்தபோதிலும் தன்னுடைய இசை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்  கே. வி. மகாதேவன் என்பதால் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து பெரும் பணத்தோடு வந்த தேவர் அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார் எம். எஸ். விஸ்வநாதன்.

தனது வாழ்க்கைப் பாதையை சரியான நேரத்தில் தனக்கு அடையாளம் காட்டிய கே. வி. மகாதேவன் மீது எம். எஸ். வி. எந்த அளவு  மரியாதை வைத்திருந்தார் என்பதற்கு “தெய்வத் திருமணங்கள்” படத்தின் போது நிகழ்ந்த இன்னொரு சம்பவம் ஒரு சாட்சி 



“பாஸ் என்கிற பாஸ்கரன்  நான் கடவுள்” ஆகிய படங்களைத் தயாரித்த கே எஸ் சீனிவாசன், கே எஸ் சிவராமன் ஆகியோரின் தந்தையான மணி அய்யர் தயாரித்த படம் “தெய்வத் திருமணங்கள்”. அந்தத் திரைப்படத்தில் முதன் முறையாக கே. வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன், ஜி.கே வெங்கடேஷ் ஆகிய மூன்று  இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றினார்கள். 



அந்தப் படத்தின் துவக்க விழாவிற்கு தினத்தந்தி நாளிதழில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார் மணி அய்யர். 


காலையில் வழக்கம்போல காப்பியைக் குடித்துவிட்டு “தினத்தந்தி” பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்த விஸ்வநாதனின் கண்களில் அந்த “தெய்வத் திருமணங் கள்” விளம்பரம் பட்டது 

அந்த விளம்பரத்தைப் பார்த்த அடுத்த நிமிடம் தனது கையிலிருந்த காபி டம்ளரைக்  கீழே வைத்து விட்டு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பிய எம். எஸ். வி. போய் நின்ற இடம் தயாரிப்பாளர் மணி அய்யரின் வீடு. 

அதிகாலை ஆறுமணிக்கெல்லாம்  தனது விட்டின் வாசலில் எம். எஸ். வி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த மணி அய்யர் அதிர்ச்சி அடைந்தவராக வெளியே வந்தார். 

தனது கையிலிருந்த “தினத்தந்தி” பேப்பரை அவரிடம் நீட்டிய எம். எஸ். விஸ்வநாதன் “இந்த விளம்பரத்தை கொடுக்கறதுக்கு முன்னாலே நீங்க பார்த்திங்களா” என்று அவரிடம்  கேட்டார். 

“பார்த்தேனே”என்று பதிலளித்த மணி அய்யர் “ஏன் ஏதாவது தப்பா வந்திருக்கா ?” என்று எம். எஸ். வி. யிடம் கேட்டார். 

“நீங்களே பாருங்க” என்று விஸ்வநாதன் காட்டிய பகுதியைப் பார்த்தவுடன்தான் அந்த காலை நேரத்தில் விஸ்வநாதன் எதற்காக தன்னைத் தேடி வந்திருக்கிறார் என்பது மணி அய்யருக்குப் புரிந்தது. 

 “தெய்வத் திருமணங்கள்” திரைப்படம் ப.நீலகண்டன், காமேஸ்வரராவ், கே.சங்கர் ஆகிய மூன்று இயக்குனர்கள் இயக்கிய படம். அந்தப் படத்திற்கு இசையமைக்க கே. வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன், ஜி.கே வெங்கடேஷ் ஆகிய மூவரையும் மணி அய்யர் ஒப்பந்தம் செய்திருந்தார் 

அப்போது எம். எஸ். விஸ்வநாதன் மிகவும் பிரபலமாக இருந்ததால் அந்த விளம்பரத்தை டிசைன் செய்த டிசைனர் எம். எஸ். விஸ்வநாதன் பெயரை முதலில் போட்டுவிட்டு கே. வி. மகாதேவன் பெயரை அவருக்குக் கீழே போட்டுவிட்டார். 

“இந்த விளம்பரத்தைப் பார்த்தா  மகாதேவன் சார் என்ன நினைப்பார்? நான்தான் இப்படி போடச் சொன்னேன்னு என்னைப் பற்றி அவர் தவறாக நினைக்க மாட்டாரா”என்று எம்.எஸ்.வி. புலம்பியதைப் பார்த்த மணி அய்யர் "நீங்க ஒன்றும்  கவலைப்படாதீங்க நான் கே வி மகாதேவனைப் பார்த்து  இந்த தப்பு எப்படி நடந்ததுன்னு விளக்கமாகச் சொல்லிவிடுகிறேன்” என்றார் 

ஆனால் அதில் எல்லாம் விஸ்வநாதன் சமாதானமாகவில்லை 

“நீங்க உடனே கிளம்புங்க. இப்பவே மகாதேவன் சார் விட்டுக்கு போய் விளக்கமா எல்லாத்தையும் சொல்லி விடுவோம்” என்று கூறி மணி அய்யரையும் அழைத்துக் கொண்டு நேராக மகாதேவன் விட்டுக்குச் சென்றார். அப்போது கே வி மகாதேவன்  ஜி. என். செட்டி சாலையில் குடியிருந்தார்.காலை வேளையில் இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அவருக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.                                                                                               

மணி அய்யரும், விஸ்வநாதனும் சேர்ந்து அந்த விளம்பரக் குழப்பத்தைப் பற்றி விளக்கியவுடன் “இந்த சின்ன  விஷயத்துக்காகவா  இந்த காலை நேரத்தில் என்னைப் பார்க்க வந்தீர்கள். எனக்கு விஸ்வநாதனைப் பற்றி தெரியாதா? நான் இதையெல்லாம் அப்படி தப்பாக எடுத்துக் கொள்வேனா” என்று அவர்களை சமாதானப்படுத்தி  அனுப்பி வைத்தார் கே வி மகாதேவன். 

இந்த சம்பவத்திற்குப்  பிறகு அந்தப் படத்தின் டைட்டிலில் கே வி மகாதேவன், ஜி கே வெங்கடேஷ் ஆகிய இசையமைப்பாளர்களுக்கு அடுத்து தன் பெயர் இடம் பெறுகிறமாதிரி பார்த்துக் கொண்டார் விஸ்வநாதன்  

எவ்வளவு உயரத்திற்கு சென்ற போதிலும் எந்த அளவிற்கு நன்றி மறக்காத குணம் கொண்டவராக எம். எஸ். வி. விளங்கினார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதார ணம்.



Comments

Popular posts from this blog

சிவாஜின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்