எம். ஜி. ஆருக்கும் பானுமதிக்கும் இடையே ஏற்ப்பட்ட மோதல்கள்  

"நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த நடிகை" என்று அறிஞர் அண்ணா அவர்களால்  பாராட்டப்பட்ட நடிகையான பானுமதி தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிப் படங்களிலும் கொடி கட்டிப் பறந்த ஒரு நடிகை.



நடிப்பில் மட்டுமின்றி பழகும் விதத்திலும் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டவர் அவர்.காட்சிகளில் நடிக்கும் போது அவரது கைளைப் பிடித்துக் கொண்டு நடிக்க வேண்டுமென்றால் கூட உடன் நடிக்கும் கதாநாயக நடிகர்கள் அவரிடம் முன்னதாகவே அனுமதி பெற்றுக் கொண்டுதான் அவரது கையைத் தொடுவார்களாம்.அந்த அளவு தனக்கென ஒரு தனி கவுரவத்தை திரையுலகில் அவர் பெற்றிருந்தார்.

கள்வனின் காதலி, ரங்கூன் ராதா ஆகிய படங்களில் ஒரு விசேஷம் என்னவென்றால் அந்த படங்களில் நான் ஒரு பெரிய நடிகையுடன் நடித்தேன் என்பதுதான். அவர்களுடன் நடிக்கும்போது எனக்கு ஒரு புது அனுபவம் ஏற்பட்டது.பல படங்களில் பானுமதி அவர்களுடன் நடித்தேன் என்பது எனக்குப் பெருமைஎன்று நடிப்பிற்கு பொருளாக விளங்கிய  சிவாஜி கணேசன் அவர்களே பானுமதியைப் பாராட்டியிருக்கிறார் என்றால் பானுமதியின்  திறமை எப்படிப்பட்டது என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்


சிவாஜியோடு பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பானுமதி, எம். ஜி. ஆரோடு இணைந்து எண்ணற்ற  வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். திரையுலகில் மிகுந்த செல்வாக்கு உள்ளவராக எம். ஜி.ஆர் விளங்கிய கால கட்டத்திலேயே  அவர் தவறு செய்தபோது அதைத் தயங்காமல் சுட்டிக் காட்டக் கூடிய தைரியம்  கொண்டவராக இருந்தவர்   பானுமதி

"நாடோடி மன்னன்" திரைப்படத்தில் எம் ஜி ஆருடன் மதனா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தார் அந்தப்படம் வெளியான போது அந்தப் படத்திற்கு இசையமைத்தது எஸ் எம் சுப்பையா நாயுடு என்ற போதிலும் முதலில் அந்தப் படத்திற்கு இசையமைக்க ஓப்பந்தமானவர் என். எஸ். பாலகிருஷ்ணன் என்ற ஒரு இசையமைப்பாளர். அவரது இசையமைப்பில் அந்தப் படத்திற்காக ஆண்டவன் எங்கே அரசாண்டவன் எங்கே என்ற பாடலை எழுதியிருந்தார் பாடலசிரியாரான முத்துக் கூத்தன்.


"நாடோடி மன்னன்" படத்திலே பானுமதியின் பாத்திரம் முதலில்  ஒரு கழைக்கூத்தாடியின் பாத்திரமாகத்தான்  அமைக்கப்பட்டு இருந்தது.  கழைக் கூத்தாடி பாடுவது போல அமைக்கப்பட்டிருந்தத அந்தப் பாடலைப் பாடுவதற்காக பானுமதி வந்த போது அந்த பாடலின் இசையில் சில மாற்றங்களை சொன்னார் எம். ஜி. ஆர்.

நீங்க சொல்கிற மாதிரி மாற்றினால் ராகத்தின் தன்மையே மாறிவிடும்என்று பானுமதி சொல்ல பாடலைக் கேட்கின்ற ஜனங்களுக்கு பாடல் இனிமையாக இருக்க வேண்டும் அதுதான் சினிமா பாட்டு. இது மேடைக் கச்சேரிக்கான பாட்டு இல்லை.சினிமா பாட்டு. அதனால் ராகங்கள் மாறினால் கவலை இல்லைஎன்றார் எம் ஜி ஆர்.  

உடனே  இசையைப்பற்றி உங்களை விட எனக்கு நன்றாக தெரியும்.அதனால் நீங்க சும்மா இருங்கள்என்று பானுமதி சொல்ல உடனே அந்த இடத்தைவிட்டு எழுந்து போய்விட்டார்  எம் ஜி ஆர்  

"நாடோடி மன்னன்" படத்தை ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து பல தடங்கல்கள் ஏற்பட்டன.   இதற்கிடையே எம். ஜி. ஆருக்கும், பானுமதிக்கும் ஆரம்பத்திலேயே பாடல் விஷயத்தில் தகராறு ஏற்பட்டதால் நொந்துபோய்விட்டார் எம். ஜி.ஆரின் அண்ணனான எம் ஜி சக்ரபாணி

முடிவில் பிரச்னைக்குரிய அந்தப் பாட்டே படத்தில் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் எம். ஜி. ஆர்.

அதற்குப் பிறகாவது அவர்கள் இருவருக்குமிடையே மோதல் நின்றதா என்றால் இல்லை

படத்தை இயக்க "கொஞ்சும் சலங்கை" படத்தை இயக்கிய எம். வி. ராமனைத்தான் எம். ஜி. ஆர் முதலில் ஒப்பந்தம் செய்திருந்தார். அவர் மனைவியின் மகன் என்ற படத்தில் தீவிரமாக ஈடுபட்டதால்  "நாடோடி மன்னன்"  படத்தை அவரால் இயக்க முடியவில்லை. அதற்குப் பிறகுதான்  அந்தப் படத்தினை இயக்கும் பொறுப்பை வேறு வழியில்லாமல் எம். ஜி. ஆர்.ஏற்றுக் கொண்டார்.இயக்குனர் கே சுப்ரமணியம் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த அவர் "நடோடி மன்னன்" படத்தின் டைரக்ஷனை மேற்பார்வை செய்யும் பொறுப்பை அவரை ஏற்றுக் கொள்ளச் சொன்னார்.

அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இரண்டு மூன்று நாட்கள் நாடோடி மன்னன் படத்தின் செட்டிற்கு வந்த கே சுப்ரமணியம் எம். ஜி. ஆர் படத்தை இயக்குகின்ற பாணியைப் பார்த்துவிட்டு "நீங்களே மிக அருமையாக இயக்குகிறீர்கள். அதனால் என் உதவியெல்லாம் உங்களுக்கு தேவைப் படாது" என்று என்று எம். ஜி. ஆரைப் பாராட்டி விட்டு அப்படத்திலிருந்து விலகிக் கொண்டார் 

அதற்குப் பிறகு அந்தப் படத்திற்காக பானுமதி சம்பந்தப்பட்ட ஒரு காட்சியை எம் ஜி ஆர் படமாக்கிக் கொண்டிருக்கும்போது என்ன காரணத்தாலோ காட்சி சரியாக அமையவில்லை.

பல முறை ஒரே காட்சியை தொடர்ந்து எம். ஜி. ஆர் படமாக்கியதால் பானுமதிக்கு ஏற்பட்ட சலிப்பு அவரது வார்த்தைகளில் கொஞ்சம் சூடாக வெளிப்பட்டது.   

முதன் முதலாக ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எவரையும் ஆத்திரமூட்டக் கூடிய அந்த விமர்சனத்தை மிகவும் சர்வ சாதாரணமாக சொன்னார் பானுமதி

கே.சுப்ரமணியம் மாதிரி ஒரு நல்ல இயக்குனரை இயக்கச் சொல்லி படத்தை எடுக்க வேண்டியதுதானே என்பதுதான் அவர் கூறிய விமர்சனம்

அவர் அப்படி சொன்னபோது எம். ஜி. ஆர் தன்னுடைய  கோபத்தை உடனடியாக வெளிப்படுத்த

வில்லை என்றாலும் பானுமதியின் விமர்சனத்தால் அவர் எந்த அளவு காயப்பட்டிருந்தார்  என்பது அவர் கதாசிரியர்  ரவீந்திரனிடம் பேசியபோது தெரிந்தது

ஏன்ப்பா உங்களை மாதிரி கதாசிரியர்களுக்கெல்லாம் கதாநாயகி இல்லாமல் கதை எழுதவே தெரியாதா?"என்று கதாசிரியர் ரவீந்திரனிடம் கேட்டார் அவர்.

தொடர்ந்து எம் ஜி ஆர் பானுமதிக்கு இடையே பிரச்னைகள் எழுந்து கொண்டிருந்ததால் எடுத்தவரை அவரது பாத்திரத்தை அப்படியே வைத்துக் கொண்டு கதையில் பல மாற்றங்களை கொண்டுவர முடிவெடுத்தார் எம்.ஜி.ஆர்.

அதன் காரணமாக படத்தின் இரண்டாம் பகுதியில் தனது தங்கையைத் தேடி ரத்னபுரி தீவிற்கு போவதாக அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் மாற்றி அமைக்கப் பட்டன அப்போது அந்த தங்கையின் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் புஷ்பலதா.




ரத்னபுரி இளவரசி  எம். ஜி. ஆரைக்  காதலிப்பது போன்று   கதை மாற்றப்பட்டது அந்த மாற்றம் எம். ஜி. ஆரை மிகவும் கவர்ந்தது.. ரத்னபுரி இளவரசி பாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற கேள்வி எழுந்தபோது  சரோஜாதேவியை போடலாம் என்று பலரும் யோசனை கூறினார்கள் . ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது.

"நாடோடிமன்னன்" படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் காட்சியில் சரோஜாதேவி நடித்திருந்தார்.

அந்த பாடல் காட்சியை வேறொரு நடிகையைப் போட்டு மீண்டும் படமாக்கிவிடலாம் என்று மற்றவர்கள் சொன்ன யோசனையை ஆரம்பத்தில் எம். ஜி. ஆர். ஏற்கவில்லை.

ஏற்கனவே படத் தயாரிப்பு செலவுகள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தன. ஆகவே "எடுத்த காட்சிகளையே திரும்பத் திரும்ப எத்தனை முறை எடுப்பது?" என்பது அவர் வாதமாக இருந்தது.

ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்னர் அந்த மாற்றங்களுக்கு எம். ஜி.ஆர் ஒப்புக் கொண்டார்அவரது அந்த  முடிவுதான்  சரோஜாதேவி என்ற நடிகை கதாநாயகி என்ற தகுதியில்  தமிழ் சினிமாவை பல ஆண்டு காலம் ஆள்வதற்கு அடித்தளம் அமைத்தது.

எந்த ஒரு விளைவுக்கும் எதிர் விளைவு ஒன்று உண்டு என்று சொல்வார்களே அது சரோஜாதேவி விஷயத்தில் சரியாக நடந்தது


எம் ஜி ஆருக்கும் பானுமதிக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருந்திருக்குமானால் சரோஜாதேவி என்ற நடிகை புகழ் பெறாமலே போயிருக்கலாம்
- அல்லது புகழ் பெற இன்னும் சில காலமாகி இருக்கலாம்.

எப்படி ஆயினும் சரோஜாதேவியின் வளர்ச்சிக்கு மறைமுகமாக வித்திட்டவர் பானுமதி என்பது மட்டும் உண்மை

இத்தனை பிரச்னைகளுக்கு நடுவே உருவான "நாடோடி மன்னன்" மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

அந்தப் படத்தின் வெற்றி விழாவை ஒட்டி  மலர் ஒன்று வெளியிடப்பட்ட போது படப்பிடிப்பின் போது நடந்த கசப்பான சம்பவங்களைஎல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் மனம் திறந்து பானுமதியைப் பாராட்டியிருந்தார் எம். ஜி. ஆர்.

பல பிரச்னைகளுக்கு நடுவே "நாடோடி மன்னன்" உருவான போது நான் சொந்தத்திலே எடுக்கும் இப்படம் ஒழுங்காக முற்றுப் பெறுமா?படம் வெளியாகும்போது படத்தில் பானுமதி இருப்பார்களா என்றெல்லாம் சந்தேகப்பட்டவர்கள்-எனது வீழ்ச்சியைக் காண ஆசைப்பட்டவர்கள்  என்று எல்லோரும் வெட்கித் தலை குனியும்படி அப்படத்திலே ஒத்துழைத்தார் பானுமதி. அது மட்டுமின்றி "நாடோடி மன்னன்" திரைப்படத்திலே அவர் ஏற்ற மதனா பாத்திரத்தை அவர் போல எவரும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று மக்களை சொல்ல வைத்தவர் பானுமதி.இவ்வாறு புகழப்படுவதை விட ஒரு நடிகையின் வெற்றிக்கு வேறென்ன சான்று வேண்டும்?" என்று அந்த விழா மலரில் பானுமதிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார் எம். ஜி. ஆர்.

படப்பிடிப்பின் போது நடந்த சின்னச் சின்ன பிரச்னைகளை மனதில் கொள்ளாமல் அவர் பானுமதியைப் பாராட்டியிருந்தது கண்டு பானுமதி நெகிழ்ச்சி அடைந்தார்  

அன்றைய சினிமா உலகம் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தது என்பதற்கு இந்த நிகழ்ச்சிகள் ஒரு உதாரணம்.

 

 

 

Comments

  1. நாடோடி மன்னன் திரைப்படத்தில் கதாநாயகி ரத்னா கேரக்டருக்கு ஒப்பந்தமாகுமுன் சரோஜாதேவி நடித்தது "பாடுபட்டா தன்னாலே பலனிருக்குது கைமேலே!" என்ற பாடல் காட்சி ஆகும்! பின்னர் அக்காட்சியில் ஜெமினி சந்திரா நடித்தார்!

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான பதிவு 🙏 நன்றி 💐👏👌❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிவாஜின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்